ஈரானுடன் நிரந்தர போர் நிறுத்தம் சாத்தியமா? உலக நாடுகளின் நம்பிக்கை குறைவு
வாஷிங்டன்: அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற உலக நாடுகளின் நம்பிக்கை, இரு தரப்பின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கருத்துகளால் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிற முக்கிய பிரச்னைகள் குறித்து நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது இரு தரப்பும் வெளியிட்டு வரும் கருத்துகள் அந்த நம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானுடன் நல்ல உடன்பாட்டை எட்ட அமெரிக்கா விரும்புகிறது. இல்லையெனில் வேறு வழிகளில் இந்த பிரச்னையை கையாள வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதில் அவசரப்பட வேண்டாம்” என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், “இரு தரப்பும் தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு, அமைதி ஒப்பந்தத்தை சரியான முறையில் உருவாக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல தலைப்புகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் அதற்காக நாங்கள் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு வந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான அமெரிக்க நடவடிக்கைகள் குறித்தே தற்போது கவனம் செலுத்தப்படுவதாகவும், அணுசக்தி விவகாரங்கள் குறித்து இந்த கட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இவ்வாறு இரு தரப்பிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதால், நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையும், அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பும் குறைந்து வருவதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
