இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தின்போது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்ததாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கூட்டு அவாமி அதிரடிக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராவலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் நேற்று ராவலகோட்டில் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் கூட்டு அவாமி அதிரடிக்குழு தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, ராணுவத்திற்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலில், பாதுகாப்புப் படையினர் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவாமி அதிரடிக்குழு குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ தரப்பில் உடனடி விளக்கம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
