இந்திய விஞ்ஞானிகள் இரவும் பகலும் அயராது உழைத்து, இஸ்ரோவின் நற்பெயரை உயர்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச விண்வெளி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, முதல் சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னை அன்புடன் அழைத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள்
பல நூற்றாண்டுகளாக விண்வெளி மனிதர்களின் கற்பனைக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும், தற்போது பூமியில் உயிர்களைக் காக்கும் முக்கிய பணிகளுக்கு விண்வெளி தொழில்நுட்பம் உதவி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி மூலம், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த ஆண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
2035ல் இந்திய விண்வெளி நிலையம்
இந்தியாவின் எதிர்கால விண்வெளி இலக்குகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு ஒரு இந்தியரை அனுப்புவதும் இந்தியாவின் முக்கிய இலக்குகளாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரோவின் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
விஞ்ஞானிகள், பொறியாளர்களின் அர்ப்பணிப்பு
இந்தியாவின் விண்வெளி சாதனைகளுக்குப் பின்னால் பல தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
“இரவும் பகலும் அயராது உழைத்து அவர்கள் இஸ்ரோவின் நற்பெயரை உயர்த்தியுள்ளனர்” என்று விஞ்ஞானிகளின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”
இந்தியாவின் விண்வெளி அணுகுமுறை “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பான விண்வெளித் திட்டங்களை இந்தியா ஆதரிப்பதாகவும், அறிவியல் தரவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பொதுவான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விண்வெளித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கான பொறுப்பு அனைவருக்கும் பொதுவானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
