நீஸ்: புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளது என்றும், உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரை சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அந்நாட்டு அமைச்சர்கள் எட்வர்ட் ஜெப்ரே, பிலிப் பாப்டிஸ்ட் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நீஸ் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி ரசித்தார்.
பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் இணைந்து ‘பாரத் இன்னோவேட்ஸ்’ என்ற புத்தாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே தொலைநோக்கு பார்வையுடன் கூடிய உறவு நிலவி வருவதாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார். ‘பாரத் இன்னோவேட்ஸ்’ தளம் இந்திய திறமையாளர்களுக்கும், ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கும் இடையே வலுவான இணைப்பை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தற்போது புதிய தொழில்முனைவு புரட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இளைஞர்கள் மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையான தீர்வுகளை உருவாக்கி வருவதாக பாராட்டினார். இந்தியா இனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டும் இல்லாமல், உலக நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கும் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கணிதம், வானியல், மருத்துவம், யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு உலக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக கூறிய பிரதமர், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் இந்தியர்களின் மரபணுவிலேயே இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் இந்தியாவில் உள்ளதாகவும், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட துறைகளிலும் பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், உலக முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
