புதுடெல்லி: இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் ஆயுதப்படைகள் உறுதியாக செயல்படும் என்று புதிய முப்படை தலைமை தளபதி N. S. Raja Subramani தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக இருந்த Anil Chauhan பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, என்எஸ் ராஜா சுப்ரமணி புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
பதவியேற்பதற்கு முன்னர், தேசிய போர் நினைவிடத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தெற்கு பிளாக்கில் அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொறுப்பேற்ற பிறகு பேசிய அவர், முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்தார். ஆயுதப்படைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம்
“தற்சார்பு இந்தியா” நாட்டின் பாதுகாப்பு கொள்கையின் முக்கிய தூணாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆயுதப்படைகளில் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராணுவம், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், புத்தாக்க மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து செயல்படுவது நவீனமயமாக்கலுக்கான முக்கிய சக்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் ஆயுதப்படைகள் தொடர்ந்து தொழில்முறை திறனையும், உறுதியான செயல்பாட்டு திறனையும் வெளிப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பை உறுதியாக காக்கும் பணியில் முப்படைகளும் தொடர்ந்து ஈடுபடும் என்றார்.
முன்னாள் தலைமை தளபதிகளுக்கு நன்றி
மறைந்த Bipin Rawat மற்றும் முன்னாள் தலைமை தளபதி அனில் சவுஹான் ஆகியோரின் தலைமைத்துவத்திற்கும் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை திறனை பாராட்டிய அவர், அவர்களின் பயிற்சி மற்றும் நலன்கள் தங்களது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்றார்.
நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், முன்னாள் ராணுவ வீரர்களின் நலன்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
முப்படைகளும் அர்ப்பணிப்பு, தைரியம், மரியாதை மற்றும் தொழில்முறை திறனுடன் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று ராஜா சுப்ரமணியன் உறுதியளித்தார்.
