பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வணிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின் போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் 30 பேர் உயிரிழந்ததுடன் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவத்தில் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ தரப்பும் போராட்டக்காரர்களும் வெளியிட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுவதால், சம்பவம் தொடர்பாக குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
