சென்னை: அரசுப் பணி கனவுடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உதவி மின் பொறியாளர் பணிக்கான தேர்வு, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 2022-ஆம் ஆண்டு நிர்வாக காரணங்களால் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின், பல ஆண்டுகளாக அந்தப் பணிக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு எந்த புதிய அறிவிப்பும் வெளியிடப்படாமல், அதே காலிப்பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப முடிவு செய்தது அவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் நிர்வாகத் தாமதம் காரணமாக பலர் வயது வரம்பை கடந்ததால் தகுதி இழந்துள்ளதாகவும், வயது வரம்பு தளர்வு கோரி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதும், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் முடிவுகளுக்குப் பிறகு, வயது வரம்பைக் காரணம் காட்டி தகுதியான விண்ணப்பதாரர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியதையும், 2013-ஆம் ஆண்டு மின்சார வாரியமும் வயது வரம்பில் தளர்வு அளித்ததையும் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தற்போதைய சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதேபோன்ற சலுகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு வயது வரம்பில் தளர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
