சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய நற்செய்தியாக, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Vijay தலைமையிலான தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றி வருவதால், அவர்களின் நலனையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களும் அதேபோன்ற பலனை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
மேலும், இந்த உயர்வின் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1,230 கோடி செலவாகும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசு மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
