அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் நினைவு நாளையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அது இந்திய ஜனநாயக வரலாற்றின் மிக இருண்ட காலகட்டங்களில் ஒன்றாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த காலத்தில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதோடு, நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வாதிகார மனப்போக்குடன் செயல்படும் போது ஜனநாயக அமைப்புகள், அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் மக்களின் உரிமைகள் ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்பதை அவசரநிலை நினைவூட்டுவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அவசரநிலையின் போது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க போராடிய அனைவருக்கும் நாடு என்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
