சென்னை: தமிழக கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணையில், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி. சொக்கலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக கோவில்களில் நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டண தரிசன முறையை முழுமையாக நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத் துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி. பாலசுப்பிரமணியம் அறிக்கையை தாக்கல் செய்து வாதாடினார்.
அவர் கூறுகையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும், கடந்த மே 15-ம் தேதி அமைச்சர் நிர்மல்குமார் மதியம் 12.51 மணிக்கே கோவிலுக்குள் நுழைந்து, 12.59 மணிக்கு மூலவர் சன்னதியில் தரிசனம் முடித்து, 1.06 மணிக்கு வெளியேறியதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும், அமைச்சரின் வருகையால் மற்ற பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றாலும், எந்த அமைச்சரும் தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என கருதினால் நீதிமன்றம் அதை அனுமதிக்காது என்று தெரிவித்தனர்.
மேலும், அமைச்சர்கள் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், கடவுள் தங்களுக்காக காத்திருப்பார் என்றும் நினைக்கக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வசூலிக்கப்படும் தொகையின் அடிப்படையில் பக்தர்களிடம் பாகுபாடு காட்டுவது எவ்வாறு நியாயமாகும் என்றும், இது பக்தர்களுக்கு எதிரான வெளிப்படையான பாகுபாடு என்றும் சுட்டிக்காட்டினர்.
சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில் தரிசன நடைமுறைகள் தொடர்பாக ரூ.25 லட்சம் மதிப்பிலான முறைகேடு கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், “கடவுள் முன் அனைவரும் சமம் என்றால் வி.ஐ.பி. தரிசனம் ஏன்? பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், சாமி தரிசனத்திற்கு கட்டணம் கட்டாயமில்லை என்றும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த வருவாய் கோவில்களுக்கு முக்கியமானதாக இருப்பதாகவும் கூறி, பதிலளிக்க அவகாசம் கோரினார்.
அப்போது நீதிபதிகள், “பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா? யாருக்கும் தனிச்சலுகை வழங்கக் கூடாது. அல்லது குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனத்திற்கு ஒதுக்கலாம். தற்போதைய கட்டண தரிசன முறை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
மேலும், கோவில்களுக்கு இத்தகைய வருவாய் அவசியமில்லை என்றும், கோவில்களில் வி.ஐ.பி. உபசரிப்பு தவறான நடைமுறை என்றும் கூறினர். தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் இல்லாத நிலையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மட்டும் இது தொடர்வது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
