அமெரிக்காவில் முறைப்படி பதிவு செய்த ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த தகவல்களைப் பரப்பவும், அதன் மீதான விமர்சனங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு விளக்கமளிக்கவும் ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு அமெரிக்க நீதித்துறையில் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டு அமைப்புகளின் சார்பில் செயல்படும் சில குழுக்கள், அந்நாட்டின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் சட்டத்தின் அடிப்படையில், ஜார்ஜியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு, டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தைத் தனது வெளிநாட்டு முதன்மை அமைப்பாகக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் பகிர்வதே நோக்கம்
பதிவுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து வெளியாகும் முழுமையற்ற அல்லது தவறான தகவல்களுக்கு விளக்கமளிப்பது, அமெரிக்க மக்களுக்கு அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை வழங்குவது, கல்வி மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், கல்வி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சட்டப்பூர்வமாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பகிரத் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊதிய ஒப்பந்தம் இல்லை என விளக்கம்
டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கும் தங்களுக்கும் இடையே நேரடி ஊதிய ஒப்பந்தமோ எழுத்துப்பூர்வமான முகவர் ஒப்பந்தமோ இல்லை என ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் தன்னார்வமாகச் செயல்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
பதிவு ஆவணங்களில், ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை மையமாகக் கொண்ட தன்னார்வ, சமூக மற்றும் கலாசார அமைப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பின் இயக்குநர் குழுவில் ராஜேந்திர சோனாரிகர், ஜெயந்த் பந்த், தேவானந்த கத்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த தகவல்களைப் பரப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையாக இந்தப் பதிவு அமைந்துள்ளதாக அந்த அமைப்பின் நோக்கங்கள் தெரிவிக்கின்றன.
