பீஜிங்: ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவியர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் அவசர மனிதநேய உதவியாக ரூ.1.84 கோடி வழங்க சீனா முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த பிப். 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின.
அப்போது மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சுமார் 180 மாணவியர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ராணுவ விசாரணையில் பழைய தகவல்களின் அடிப்படையில் தவறுதலாக பள்ளி கட்டிடம் குறிவைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இந்த தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது:
ஈரானில் அமெரிக்க தாக்குதலில் பள்ளி மாணவியர் உயிரிழந்தது மிகவும் கண்டனத்துக்குரியது.
உயிரிழந்த மாணவியருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்.
பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
பள்ளிகளை தாக்குவது சர்வதேச மனிதநேய சட்டத்தையும் மனிதாபிமானத்தின் அடிப்படை வரம்புகளையும் மீறும் செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சீன சிவில் செஞ்சிலுவை சங்கம், ஈரான் செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.1.84 கோடி அவசர மனிதநேய உதவி வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிதி தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
