Kawagoe நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் மசூதி தொடர்பாக ஜப்பானில் சர்ச்சை எழுந்துள்ளது. கட்டுமான விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி, அந்த கட்டடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜப்பானில் பாகிஸ்தான் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் கவகோயே பகுதியில், அவர்களுக்காக ஒரு மசூதி கட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுமானத்திற்காக தேவையான அரசு அனுமதிகள் பெறப்படவில்லை என்றும், நகர்ப்புற மேம்பாட்டு கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதன் திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான பாகிஸ்தான் தூதர் Abdul Hameed பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஜப்பான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கட்டுமானம் நடைபெற்ற பகுதி நகர்ப்புற மேம்பாட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக இருப்பதால், அங்கு எந்த புதிய கட்டடத்தையும் அமைக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளூர் மக்களின் கருத்துகளும் பெறப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்டுமான விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அந்த மசூதியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக சில உள்ளூர் குடியிருப்பாளர்களும் குரல் எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், இந்த கட்டுமான நடவடிக்கையுடன் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
