“அஜித், விஜய் இருவருக்குமே முதல்வர் யோகம் இருந்தது” – ஜோதிடர் ராதன் பண்டிட் பேட்டி
சென்னை: முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின்னர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்த பதவி வழங்கப்பட்டது எனக்கு முன்கூட்டியே தெரியாது. அது ஒரு சர்ப்ரைஸ் போல நடந்தது. நான் பழநிக்கு சென்று மொட்டை அடித்து திரும்பி வந்தபோது, பதவி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதில் எனக்கு வருத்தம் இல்லை. விஜய்யுடன் உள்ள உறவு தான் எனக்கு முக்கியம்” என்றார்.
மேலும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவே தனது பொறுப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும், அதனால் எந்த மனவருத்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். விஜய்க்கு தனது அரசியல் அனுபவம் மற்றும் பேச்சு பிடித்ததால் தான் இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
“எனக்கு ஜோதிடத்தில் கொஞ்சம் அறிவு மட்டுமே உள்ளது. நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளேன். அரசியலில் எனக்கு நல்ல அனுபவம் உள்ளது” என்றும் ராதன் பண்டிட் தெரிவித்தார்.
விஜய் குறித்து பேசும்போது, “அவரை யாராலும் பணிய வைக்க முடியாது. அவர் முருக பக்தர். தேர்தலுக்கு முன் கோவில்களுக்கு சென்றால் அதை அரசியலாக்குவார்கள் என்று நினைத்தார். தேர்தலுக்கு பிறகு நன்றி செலுத்த திருச்செந்தூர் சென்றார்” என்றார்.
அஜித் மற்றும் விஜய் குறித்து பேசுகையில், “இருவருக்குமே முதல்வராகும் யோகம் இருந்தது. ஆனால் விஜய்க்கு அரசியலுக்கு வர விருப்பம் இருந்தது. அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வராகி விட்டார். இனி அஜித்துக்கு அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு” என்று கூறினார்.
மேலும், “விஜய் ஜாதகப்படி அடுத்த 40 முதல் 50 ஆண்டுகள் வரை போட்டியில்லாமல் வாழ்வார். அவர் 100 ஆண்டுகள் கடந்தும் வாழ்வார். அவர் மக்களை காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதன் போன்றவர்” என்றும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசுகையில், அவரது பெயரை “Jayalalithaa” என்று மாற்ற பரிந்துரைத்தது தான்தான் என்றும், 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் பெயரை மீண்டும் ‘மெட்ராஸ்’ என்று மாற்றும் முயற்சியை தானே தடுத்ததாகவும் ராதன் பண்டிட் கூறினார்.
அதேபோல், எடப்பாடி கே. பழனிசாமி குறித்து, “2026-27 காலகட்டம் அவருக்கு சோதனையான காலம். மீண்டும் எழுவது கடினம். அவரது அரசியல் வாழ்க்கை முடிவை நோக்கி செல்கிறது. இனி அதிமுக மதிமுக போன்ற நிலைக்கு செல்லக்கூடும்” என்றும் ரிக்கி ராதன் பண்டிட் கருத்து தெரிவித்துள்ளார்.
