புதுடில்லி: இளம் தலைமுறையினரை அதிக அளவில் ஈர்த்து, அவர்களுடன் நீண்ட கால வாடிக்கையாளர் உறவை உருவாக்க பொதுத்துறை வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் பொதுத்துறை வங்கி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அவர், ஜென்-சி தலைமுறையினரின் தேவைகளுக்கு ஏற்ப எளிமையான, நவீன மற்றும் 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய டிஜிட்டல் வங்கிச் சேவைகளை அரசு வங்கிகள் வழங்க வேண்டும் என்றார்.
அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு ‘இளைஞர்களுக்கான வங்கிச் சேவை’ என்ற சிறப்பு பிரசாரத்தை பொதுத்துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஸ்மார்ட்போன்களுடன் வளர்ந்துள்ள இன்றைய இளைஞர்களுக்கு பாரம்பரிய வங்கிச் சேவைகளை விட எளிமையான மற்றும் நவீன சேவைகள் தேவைப்படுவதை வங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வங்கிக் கிளைகளுக்கு இளைஞர்கள் வருவதற்காக காத்திருக்காமல், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்களுக்கு நேரடியாக சென்று அவர்களை வங்கிச் சேவைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இளைஞர்களுக்கு நிதி விழிப்புணர்வு
கிரெடிட் ஸ்கோர், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் முறையான கடன் பெறும் வழிமுறைகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
ஒரு இளைஞர் வங்கியில் கணக்கு தொடங்கும்போதே, அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் தேவையான நிதி சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு வங்கி வீட்டுக் கடனுக்கு மட்டும் பயனுள்ளதாக இல்லாமல், வாடிக்கையாளரின் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தேவையான வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இளம் இந்தியர்களின் முதல் மற்றும் நம்பகமான வங்கித் தேர்வாக பொதுத்துறை வங்கிகள் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வங்கிச் சேவைகளுடன் உடற்பயிற்சி மையங்கள் மற்றும் யோகா மையங்களுக்கான சலுகை கூப்பன்கள், வவுச்சர்கள் போன்ற கூடுதல் சலுகைகளையும் வங்கிகள் வழங்கலாம் என அவர் பரிந்துரைத்தார்.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப சேவைகள்
வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் அவை எவ்வாறு மாறும் என்பதை வங்கிகள் முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஒரு மாணவர் பின்னர் ஊழியராகவோ தொழில்முனைவோராகவோ மாறலாம். சிறு தொழில் பின்னர் சிறு நிறுவனமாகவும், அதன்பின் நடுத்தர நிறுவனமாகவும் வளரலாம். அதேபோல், ஒரு வைப்புத்தொகையாளர் எதிர்காலத்தில் முதலீட்டாளராகவும் மாற வாய்ப்புள்ளது.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளை தொடர்ந்து வழங்கி, ஒவ்வொரு கட்டத்திலும் வங்கிகள் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
