விஜயவாடா கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
சென்னை: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீரை முறைப்படி வழங்குவது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் விஜய், விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுதோறும் 11 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும், தமிழகத்திற்கு உரிய அளவில் நீர் வழங்கப்படுவதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கிருஷ்ணா கால்வாய் பராமரிப்புக் கட்டணமாக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடியை ஆந்திர நீர்வளத் துறைக்கு வழங்கி வருகிறது.
இந்தச் சூழலில், தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் விஜய் ஆந்திரா சென்றார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.
விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்தை அடைந்த முதல்வர் விஜய், அங்கிருந்து கனக துர்கா அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். கோவிலில் அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவரைக் கண்ட பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் முதல்வர் விஜய்க்குப் பிரசாதமும் கனக துர்கை அம்மன் மற்றும் மல்லேஸ்வர சுவாமியின் புகைப்படங்களும் வழங்கப்பட்டன.
கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கோவில், புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
