கோவைக்கு நாளை வருகிறார் முதல்வர் விஜய்: காந்திபுரம் வரை ரோடு ஷோ நடத்தத் திட்டம்
கோவை: கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக, முதல்வர் விஜய் நாளை (அக்டோபர் 16) கோவைக்கு வருகை தருகிறார். இதையொட்டி, விமான நிலையத்திலிருந்து காந்திபுரம் வரை சாலை வழியாகப் பயணம் மேற்கொள்ளவும், ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் நாளை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாகக் காலை 11.45 மணிக்கு பெரியார் அறிவுலகத்தைச் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு நினைவுக் கல்வெட்டைத் திறந்து வைத்து, அறிவுலக வளாகத்தைப் பார்வையிட உள்ளார். விண்வெளியில் பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ் லிப்ட்டில் அவர் பயணிப்பாரா, அனைத்து தளங்களையும் பார்வையிடுவாரா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அறிவுலகத்தின் இரண்டாவது தளத்தில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருடன் முதல்வர் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் திறந்து வைக்கப்படுவதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விழா மதியம் 1.05 மணி வரை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 1.06 மணிக்குக் காந்திபுரத்திலிருந்து புறப்படும் முதல்வர், பிற்பகல் 1.40 மணிக்கு விமான நிலையத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் விமான நிலையத்திலிருந்து காந்திபுரம் வரை காரில் சாலை வழியாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதால், அந்த வழித்தடத்தில் ரோடு ஷோ நடத்துவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
