NDA வேட்பாளர் அறிமுகம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள சிவகவி ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், பாமக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அசோக் ஆனந்த் போட்டி
கூட்டத்தைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
“அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்”
கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரத்தையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உறுதுணையுடன் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.
“புதுச்சேரியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வெற்றி தேவை”
புதுச்சேரி சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
எனவே, கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மாநில அந்தஸ்துக்காக பிரதமரை சந்திப்பேன்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி கட்சிகளுடன் டெல்லி சென்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பிரதமரை சந்திப்பேன்” என ரங்கசாமி அறிவித்தார்.
அசோக் ஆனந்த், கடந்த தேர்தலில் தான் பெற்ற வாக்குகளைவிட கூடுதல் வாக்குகளைப் பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
