ஸ்ரீவில்லிபுத்தூரில் வெடிகுண்டு மிரட்டல்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, போலீசார் முன்னிலையில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தின்போது வாக்குவாதம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 16ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் வழியாக ஊர்வலம் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் முன்னிலையில் மிரட்டல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், “பாரத மாதாவுக்கு ஜெய் என்று கூச்சலிடுவார்கள்… நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா?” எனக் கூறியதாக தெரிகிறது.
அப்போது மற்றொரு இளைஞர் அங்கு வந்து, “ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்… எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என போலீசார் முன்னிலையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு இளைஞர்களிடம் விசாரணை
இளைஞரின் இந்த மிரட்டல் காரணமாக அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரு இளைஞர்களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
