சேவா சங்கல்ப் யாத்திரை குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
புதுடெல்லி: இளைஞர்கள் தான் வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சேவா சங்கல்ப் யாத்திரை மேற்கொண்டு வரும் குழுவினருடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.
வட்நகரில் இருந்து வாரணாசி வரை சேவா சங்கல்ப் யாத்திரை
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் சேவா சங்கல்ப் அபியான் உள்ளிட்ட பல்வேறு சேவை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் வட்நகரில் இருந்து, அவரது மக்களவைத் தொகுதியான வாரணாசி வரை பாஜக தொண்டர்கள் சேவா சங்கல்ப் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.
சேவை மனப்பான்மையை பிரதமர் மோடி பாராட்டு
யாத்திரையில் பங்கேற்றவர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, யாத்திரை குழுவினரின் சேவை மனப்பான்மையையும் அவர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.
வட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய இரு நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், வட்நகர் தனது பிறந்த இடமாகவும், வாரணாசி தனது பணியிடமாகவும் இருப்பதால் இந்த இரு நகரங்களுடனும் தனக்கு சிறப்பான தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவம்
தன்னலமற்ற சேவை மனப்பான்மையின் மூலம் ஆயுஷ்மான் பாரத் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வட்நகரில் இருந்து வாரணாசி வரையிலான பயணத்தின்போது, சேவை சார்ந்த பல்வேறு அனுபவங்களை யாத்திரையில் பங்கேற்பவர்கள் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
2047க்குள் வளர்ந்த இந்தியா: இளைஞர்களுக்கு முக்கிய பங்கு
இந்தியாவை கட்டமைப்பதே முக்கிய நோக்கம் என்றும், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த இலக்கை நனவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவர்கள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஈடுபடுத்தும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
