சென்னை: சென்னை புழல் மத்திய சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பல கொலை வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் சில கைதிகள், புழல் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே பிரிவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை பெற்ற சில கைதிகளும் உள்ளனர்.
சமீப காலமாக, சிறைக்குள் சட்டவிரோத தகவல் பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டில் உள்ள தொடர்புகளுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த தகவல்களின் அடிப்படையில், உயர் பாதுகாப்புப் பிரிவில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தொடர்பான மோதல் மற்றும் கொலை முயற்சி குறித்த சம்பவத்தையடுத்து, அனைத்து கைதிகளிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சில கைதிகள் சிறைக்குள் பதற்றம் மற்றும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக சிறை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயர் பாதுகாப்புப் பிரிவில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டு, கைதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்டை நாடுகளில் சிறை பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
