டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அனைத்து எம்.பி.க்களும் தங்களது வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதோடு, மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தருண் சுக் தெரிவித்ததாவது, “எம்.பி.க்கள் அனைவரும் தேச நலனையே முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தருணத்தையும் அர்ப்பணிக்கும் மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்” என்றார்.
மேலும், இந்திய இளைஞர்களின் திறமையை உலக நாடுகள் இன்று கவனித்து வருவதாகவும், நாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று வருவதாகவும், அண்மையில் பல்வேறு நாடுகளுடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தருண் சுக் தெரிவித்தார்.
