குழந்தைகள் பால் பவுடரில் விதிமீறல்
புதுடெல்லி: நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பால் பவுடர்கள் தொடர்பாக விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் விளம்பரங்கள் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான பிரசாரங்களுக்கு உணவு பாதுகாப்பு விதிகளில் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் அவற்றின் விளம்பரங்கள் குறித்து FSSAI ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 குழந்தைகள் உணவுப் பொருட்கள் ஆய்வு
நெஸ்லே இந்தியாவின் ‘NAN EXCELLA PRO Stage 1’, ‘Lactogen Pro 1’ மற்றும் ‘Follow-up Formula’ ஆகிய மூன்று குழந்தைகள் உணவுப் பொருட்களை FSSAI ஆய்வு செய்துள்ளது.
இதில், சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த தகவல்களும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் தொடர்பாக விளக்கம் கேட்பு
‘NAN EXCELLA PRO Stage 1’ பொருளின் விளம்பரத்தில் 5 HMOs மற்றும் Whey Protein தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து நெஸ்லே இந்தியாவிடம் FSSAI விளக்கம் கேட்டுள்ளது.
அதேபோல், ‘Lactogen Pro 1’ பால் பவுடர் விளம்பரத்தில் Whey Protein எளிதில் செரிமானமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாகவும் நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
ஆய்வக பரிசோதனையில் பயோட்டின் அளவு
இணை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ‘Follow-up Formula’ பால் பவுடர் மாதிரி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.
அதில், பயோட்டின் (Vitamin B7) அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையிலும் இதே முடிவு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஸ்லே இந்தியா மீது 3 வழக்குகள்
இந்த மூன்று பொருட்கள் தொடர்பாக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.
இதில், இரண்டு வழக்குகள் விளம்பரங்களில் இடம்பெற்ற தகவல்கள் தொடர்பானவை என்றும், மற்றொரு வழக்கு ஆய்வக பரிசோதனையில் கண்டறியப்பட்ட பயோட்டின் அளவு தொடர்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
