சென்னை: தமிழக சட்டமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் சபாநாயகர் மற்றும் தவெக அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், தனிப்பட்ட சாதி, மத விவகாரங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டமன்ற சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டிய அரசியலமைப்பு சார்ந்த முக்கியமான பதவி என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய சபாநாயகர் தனது மத அடையாளத்தை வெளிப்படையாக முன்னிறுத்துவதுடன், தான் சார்ந்த மதப் பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சபாநாயகர் இருக்கையில் இருந்து கோரிக்கை விடுப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தவெக அரசு அமைந்தது முதல் தமிழக அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அமைச்சர் மரிய வில்சன் சட்டசபைக்கு ஜெபமாலையுடன் வருவதையும், தனது மத நம்பிக்கைகளை அவையில் வெளிப்படுத்துவதையும் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட மத நம்பிக்கைகளை தவறு எனக் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தனிப்பட்ட மத நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை சட்டமன்ற நடவடிக்கைகளுடன் இணைப்பது அதன் மாண்பை பாதிக்கும் என்றும், சட்டமன்றம் ஒரு குறிப்பிட்ட மதத்தை நோக்கி நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதுபோன்ற விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய நயினார் நாகேந்திரன், இனிவரும் காலங்களில் சபாநாயகர் மற்றும் தவெக அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட சாதி, மத விவகாரங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல் அதன் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
