வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகள் மற்றும் மறைமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, “மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிக்கலை சந்தித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கனடா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஏரியின் பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்தது தொடர்பான விவகாரங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
“வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்”
மார்க் கார்னி கூறுகையில், அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தீவிர கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியும் என தெரிவித்தார்.
கனடாவின் தொழில்துறைகள் படிப்படியாக சுருங்கி அழியும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அத்தகைய நிபந்தனைகளை கனடா ஏற்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
“மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்” என டிரம்ப் நிர்வாகத்துக்கு அவர் அறிவுறுத்தினார்.
“வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்காதீர்கள்”
மேலும், கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும், மற்றவர்களை குறை கூறுவதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என மார்க் கார்னி வலியுறுத்தினார்.
மற்றவர்களை குறை கூறாமல், தங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
