மாணவி தற்கொலை வதந்தியால் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்
ஜலந்தர்: பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது சில மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய விமானப்படை விமானம் மற்றும் ராணுவ பீரங்கி உள்ளிட்டவற்றின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். மேலும், பல்கலைக்கழக கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் பரவிய தகவல்
பஞ்சாபின் கபூர்த்தலா மாவட்டம் பக்வாரா பகுதியில் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவ விமானம், பீரங்கிகள் மீது ஏறி போராட்டம்
ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டம், பின்னர் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
சில மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தினர். மேலும், வளாகத்தில் மாதிரிக்காக வைக்கப்பட்டிருந்த மிக் ரக போர் விமானம் மற்றும் ராணுவ பீரங்கி உள்ளிட்டவற்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பல்கலைக்கழக கட்டடத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
இதன் பின்னரும் போராட்டம் தொடர்ந்த நிலையில், மாணவர்கள் ஜலந்தர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி குறித்து பரவிய தகவல் வதந்தி: பல்கலைக்கழகம்
இதற்கிடையே, மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் வெறும் வதந்தி என லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதி செய்யாமல் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
