சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றான இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவிலுக்கு காரைக்குடி நகரின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் சில நிலங்கள் ஆக்கிரமிப்பிலும், சில நிலங்கள் தேவஸ்தான அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காரைக்குடி சூடாமணிபுரம் குறிச்சிபுறவு பகுதியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டரை ஏக்கர் நிலம் அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
நிலத்தை வாங்கியவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோதுதான், அது கோவில் நிலம் என பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவில் நிலம் தொடர்பான புகார் இருப்பதால், நீதிமன்றத்தின் உரிய உத்தரவை பெற்ற பிறகே அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிலம் வாங்கியவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் காவல் நிலையத்தில் நிலம் வாங்கியவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கு முன்பும், 2011-ஆம் ஆண்டு இதே நிலம் தொடர்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு நான்கு பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அது கோவில் நிலம் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
