செய்தி
வெல்லிங்டன்: இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நியூசிலாந்து பார்லிமென்ட் நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன் இந்த மசோதா 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விலக்கு
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாளிலிருந்து, நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் சுமார் 95 சதவீத பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படவோ அல்லது முழுமையாக நீக்கப்படவோ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரவேற்பு
நியூசிலாந்து பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள்
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேளாண் உற்பத்தித்திறன், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், பாரம்பரிய மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வர்த்தக உறவு
இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதா நியூசிலாந்து பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
