நாட்டின் எல்லை பாதுகாப்பில் அமித் ஷா உறுதி
புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு என்பது அதன் எல்லைகள் பாதுகாக்கப்படுவதில்தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா–வங்கதேச எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலத்தை வழங்குமாறு மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக அமித் ஷா கூறினார்.
1,129 ஏக்கர் நிலம்
இந்தியா–வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு கேட்டுவந்த 1,129 ஏக்கர் நிலம் நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நிலத்தை வழங்குவதில் முந்தைய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எல்லைகள் பாதுகாக்கப்படுவதில்தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றும், எனவே எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.
வந்தே மாதரம் குறித்து கருத்து
மேலும், வந்தே மாதரம் பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து தனது வருத்தத்தையும் அமித் ஷா வெளிப்படுத்தினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக வந்தே மாதரத்தின் முழு வடிவம் தேசிய அளவில் உரிய முறையில் பாடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றிய வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.
