பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிப்பு
புதுடில்லி: பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் நூற்றாண்டு பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட கருத்தில், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் உள்ள சிராஜ் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவில் இடிப்புக்கு இந்தியா கண்டனம்
நூற்றாண்டு பழமையான சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலத்திற்கு எதிரான இந்தச் சம்பவத்தை கண்டிக்கத்தக்க நாசவேலை என இந்தியா குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் அதிகாரிகள் தவறியிருப்பது கவலைக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கேள்வி
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதையும், அவர்களின் மத சுதந்திரம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிப்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், இடிக்கப்பட்ட கோவிலை மீட்டெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மை குடிமக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் அவர்களின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பான தனது பொறுப்பை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
