போலீசார் ஒருதலைபட்சமாகச் செயல்படுகின்றனர்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
திருப்பூர்: தமிழக காவல்துறையினர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட அமைப்பின் நிர்வாகிகளை விடுவித்து, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்களில் நான்கு இடங்களில் பேசிய அமைப்பின் பொறுப்பாளர்களை போலீசார் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பங்கேற்ற சென்னை நிகழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, கடந்த 4ஆம் தேதி சென்னையில் 19 இடங்களில் அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து அவசரமாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படும் நபர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைப்பின் நிர்வாகிகள் மீது நள்ளிரவில் வழக்குப் பதிவு செய்து அதிகாலையில் கைது செய்ததன் பின்னணி என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவித்து, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
