சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ஹர் கர் திரங்கா’ எனப்படும் ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, அதனை Har Ghar Tiranga இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மத்திய கலாசார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையும், நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமையையும் கொண்டாடும் வகையில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
