சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் ஈவெரா சிலையும் உடைக்கப்படும் என ஹெச். ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அதேபோல், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாகவும் ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த இரு வழக்குகளும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்குகளின் விசாரணை முடிவில், 2024-ம் ஆண்டு ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிட்டது.
அதில், ஹெச். ராஜாவின் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையவில்லை என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, ஹெச். ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
