மும்பை: மகள்களின் கல்விக்காக மஹாராஷ்டிராவில் 47 வயது பெண் ஒருவர் சேலை அணிந்தபடி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு முதல் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டம் அம்பாஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர். அவரது கணவர் மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டு மகள்களுடன் ரமாபாய் வசித்து வருகிறார். தனது மகள்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கனவாக உள்ளது.
மூத்த மகள் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் கல்வி மையத்திலேயே ரமாபாய் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உள்ளூர் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.3,000 பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மகள்களின் கல்விக்கு அந்தப் பணம் உதவும் என கருதிய ரமாபாய், மாரத்தான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். ஆனால், அவரிடம் விளையாட்டுப் போட்டிக்கான உடையோ, ஓட்டப் பயிற்சிக்கான ஷூக்களோ இல்லை. இதனால் வழக்கம்போல் சேலை அணிந்துகொண்டு போட்டியில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செருப்பு அணிந்து ஓடத் தொடங்கிய ரமாபாய், சிறிது நேரத்திலேயே அதையும் கழற்றிவிட்டு வெறும் காலில் தொடர்ந்து ஓடினார். சாலையில் கிடந்த கற்களையும் பொருட்படுத்தாமல் ஓடிய அவர், மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
இதுகுறித்து ரமாபாய் கூறுகையில், மாரத்தானில் பங்கேற்ற பல பெண்களில் இருந்து தானே வெற்றி பெற வேண்டும் என உறுதியாக இருந்ததாக தெரிவித்தார். ஓட்டத்தின் போது தனது மகளின் எதிர்காலமே கண் முன் இருந்ததாகவும், போட்டியில் கிடைத்த ரூ.3,000 மகளுக்கு புத்தகங்கள் வாங்க உதவும் என்றும் கூறினார்.
ரமாபாயின் இரண்டாவது மகள் பூஜாவும் இந்த மாரத்தானில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தாயை ஊக்குவிப்பதற்காகவே போட்டியில் பங்கேற்றதாகவும், ஆனால் தனது தாயார் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கவில்லை என்றும் பூஜா தெரிவித்தார்.
தனது சகோதரி போலீஸ் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், தான் வங்கித்துறையில் பணியாற்ற விரும்புவதாகவும் பூஜா கூறினார்.
ரமாபாய் குடும்பத்தின் கல்வி மீதான அர்ப்பணிப்பை அறிந்த கல்வி மையத்தின் இயக்குனர், பூஜாவின் போட்டித் தேர்வு பயிற்சிக்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
