சென்னை: “நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும்” என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் ‘எண்ணங்களும், எழுத்துகளும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசினார்.
சமூகத்திற்காக வாழ்ந்தவர்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான பயணமே வாழ்க்கை என்றும், அந்த காலகட்டத்தில் சமூக நலனுக்காகவும், பாரம்பரிய கலாசாரம் மற்றும் அதன் மேன்மையை பாதுகாப்பதற்காகவும் ஒருவர் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது வாழ்க்கை வரலாறாக மாறும் என்றும் அவர் கூறினார்.
தனக்காக வாழாமல் சமூகத்திற்காக ராமகோபாலன் வாழ்ந்ததாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இந்து முன்னணி தொடக்கம்
மதமாற்றத்தை தடுப்பதற்கும், கடவுள் மறுப்புக்கு எதிராகவும் வலிமையாக செயல்படுவதற்காக ராமகோபாலன் 1980ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
அப்போது அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்வோர் குறைவாக இருந்தபோதிலும், நல்ல கருத்துகள் இளைஞர்களை சென்றடைய வேண்டும் என்பதில் ராமகோபாலன் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
இளைஞர்களின் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்து, உயர்ந்த எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“முழு சிந்துவும் நமதாகும்”
சனாதனம் இந்த மண்ணின் சொத்து என்ற சிந்தனை ராமகோபாலனை வழிநடத்தியதாக கூறிய சி.பி. ராதாகிருஷ்ணன், “என்று காண்போம் எங்கள் சிந்துவை” என்ற உணர்வை அவர் அனைவரின் மனதிலும் ஏற்படுத்தினார். நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும் என தெரிவித்தார்.
விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
