சென்னையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையில் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக 1,500க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
42 அடி கண் திருஷ்டி கணபதி
கொளத்தூர் பூம்புகார் நகரில் கண் திருஷ்டி கணபதி எந்திரத் தகடுகள் மற்றும் சூரிய சக்கரத் தகடுகளால் உருவாக்கப்பட்ட 42 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலையை தரிசனம் செய்வதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
சங்குகளால் உருவாக்கப்பட்ட விநாயகர்
கொளத்தூரின் மற்றொரு பகுதியில் 12 ஆயிரம் வலம்புரி சங்குகள் மற்றும் 2 ஆயிரம் சிப்பிகளைக் கொண்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த சிலையும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
மங்காரம் தோட்டம் பகுதியில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளைக் கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சி.ஐ.டி. நகரில் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
நவதானிய விநாயகர்
மேற்கு மாம்பலம் லட்சுமி நகரில் கருப்பு எள், வெள்ளை எள், பருப்பு வகைகள் உள்ளிட்ட 160 கிலோ நவதானியங்களைக் கொண்டு 11 அடி உயரத்தில் நவதானிய விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சிப்பிகள், அகல் விளக்குகளால் பிரம்மாண்ட சிலைகள்
மணலி பகுதியில் 3,500 கடல் சிப்பிகளைக் கொண்டு 21 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மணலி புதுநகரில் 15 ஆயிரம் மண் அகல் விளக்குகளால் 30 அடி உயர விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க. நகரில் 300 புடவைகள், 200 வேட்டிகள் மற்றும் 250 துண்டுகளைக் கொண்டு ஆடை வடிவிலான விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் வழிபட்ட சிலைகள் கரைப்பு
இதனிடையே, வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் அருகில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைத்து வருகின்றனர்.
19, 20ம் தேதிகளில் பிரம்மாண்ட ஊர்வலம்
சென்னையின் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.
இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னையின் 4 கடற்கரைப் பகுதிகளில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.
