சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ் உலக அளவில் சுமார் 9 கோடி பேரால் பேசப்படும் மொழி என்றும், தமிழகத்தின் ஆட்சி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
“உயர்நீதிமன்றத்திலும் தமிழ் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்”
தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிணைந்த மொழியாக இருப்பதாக தெரிவித்த முதல்வர் விஜய், மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
அதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம் என அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தீர்ப்புகள், உத்தரவுகள் தமிழில் வழங்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை தமிழில் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
மேலும், தமிழில் மனுக்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழக்குகள் தொடர்பான வாதங்கள் தமிழில் நடைபெறும்போது அவற்றை பொதுமக்களும் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என முதல்வர் தெரிவித்தார்.
“இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல”
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்றும், தமிழ் மொழிக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்கான கோரிக்கை மட்டுமே என்றும் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார்.
இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதியும் மத்திய அரசும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்டசபை ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
அனைத்து கட்சிகளும் ஆதரவு
முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரும் தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
