கனடா சீக்கியக் கோவிலில் கத்திக்குத்து தாக்குதல்: பிரதமர் மார்க் கார்னி கண்டனம்
எட்மண்டன்: கனடாவின் எட்மண்டனில் உள்ள சீக்கியக் கோவிலில் அதிகாலை நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எட்மண்டனில் உள்ள சீக்கியக் கோவிலில் இன்று ஆகஸ்ட் 22 அதிகாலை ஏராளமானோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒருவர் திடீரென கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து அலறியடித்தபடி வெளியேறினர். இந்த தாக்குதலில் 75 வயது முதியவர் மற்றும் 51 வயது நபர் என இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது
சம்பவம் தொடர்பாக 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு 2015-ம் ஆண்டு முதல் வன்முறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், தற்போதைய கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த உலக சீக்கிய அமைப்பு, இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது கவலைக்குரியது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
“வழிபாட்டுத் தலத்தில் யாரும் பாதுகாப்பற்றதாக உணரக்கூடாது”
சீக்கியக் கோவிலில் நடைபெற்ற தாக்குதலை கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எட்மண்டனில் உள்ள சீக்கியக் கோவிலில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் கொடூரமானது என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களில்கூட பாதுகாப்பற்றதாக உணரக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை விரைவாக கைது செய்த எட்மண்டன் போலீசாருக்கும் பிரதமர் மார்க் கார்னி நன்றி தெரிவித்துள்ளார்.
