வாஷிங்டன்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட்-16’ நாக்-அவுட் போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியது. கடைசி நிமிடங்களில் லியோனல் மெஸ்சி மற்றும் என்சோ பெர்னாண்டஸ் அடித்த கோல்கள் அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுத் தந்தன.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முக்கியமான நாக்-அவுட் சுற்றில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.
15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் அடித்த கோலால் எகிப்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியின் 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மற்றொரு கோல் அடிக்க, எகிப்து 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
இந்நிலையில், ஆட்டத்தின் இறுதி 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அசத்தலான கம்பேக் கொடுத்தது. 79-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ முதல் கோலை அடித்து அணியின் நம்பிக்கையை உயிர்ப்பித்தார். பின்னர் 83-வது நிமிடத்தில் கேப்டன் லியோனல் மெஸ்சி அபாரமான கோல் அடித்து 2-2 என சமநிலையை ஏற்படுத்தினார்.
போட்டியின் கூடுதல் நேரமான 90+3-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை பதிவு செய்தார். இதன் மூலம் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. சிறப்பாக போராடிய எகிப்து அணி, கடைசி நேர கோலால் தொடரிலிருந்து வெளியேறியது.
