சென்னை: கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடைபெற்ற கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், சட்டசபை சபாநாயகர் பிரபாகர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கத்தோலிக்க அமைப்புகள் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டசபை சபாநாயகர் பிரபாகர் கலந்து கொண்டார்.
பேரணியில் “கருக்கலைப்பு என்பது கொலை”, “கருவைக் கலைக்க உரிமை இல்லை” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் பிரபாகர், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். கரு உருவாகும் தருணத்திலிருந்தே உயிர் தொடங்குவதாகவும், ஒவ்வொரு குழந்தையும் கடவுள் அளித்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் பங்கேற்பு குறித்து கேள்வி
அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், பெண்களின் உடல்சார்ந்த மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் மத அடிப்படையிலான கருத்துகளை வெளிப்படையாக ஆதரிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சட்டசபையில் பைபிள் வாசகங்களை மேற்கோள் காட்டி சபாநாயகர் பிரபாகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கருக்கலைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருப்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கருக்கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான மத அடிப்படையிலான பிரசார நிகழ்ச்சியில் சபாநாயகர் பங்கேற்றது சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
