டி-20 உலக கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கம்; ஸ்காட்லாந்து சேர்ப்பு
புதுடில்லி:
இந்தியாவில் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டு, அதன் இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலக கோப்பை தொடரில் (பிப்.7 – மார்ச் 8, 2026) பங்கேற்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) தெரிவித்தது.
இந்தியாவில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் பி.சி.பி. கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. ஏற்கவில்லை.
முடிவு எடுக்க வழங்கப்பட்ட அவகாசம்
இந்தியா வருவது குறித்து இறுதி முடிவெடுக்க வங்கதேசத்திற்கு இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தும், வங்கதேசம் தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் ஐ.சி.சி. குழுவிடம் (டி.ஆர்.சி.) வங்கதேசம் முறையிட்டது. ஆனால், அந்த முறையீட்டை விசாரிக்க ஐ.சி.சி. மறுத்துவிட்டது.
இதையடுத்து நடைபெற்ற ஐ.சி.சி. கூட்டத்தில், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், டி-20 உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இந்த முடிவு தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கும் இதுகுறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
இந்தியாவுக்கு செல்லும் விவகாரத்தில் முடிவெடுக்க 24 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அந்த காலக்கெடு முடிந்த பிறகும் அதிகாரப்பூர்வ பதில் அளிக்கப்படவில்லை என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதற்கு முன் தாகாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பும் விதிமீறலாக கருதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் வங்கதேசம் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான வழி இருக்கிறதா
ஐ.சி.சி. முடிவுக்கு எதிராக, சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தை வங்கதேசம் அணுகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், டி-20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடியே நடைபெறும் என ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
ஸ்காட்லாந்து எப்படித் தேர்வு
2026 டி-20 உலக கோப்பைக்கான ஐரோப்பிய தகுதிச்சுற்றில், நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்று தகுதி பெற்றன. ஜெர்சே மூன்றாம் இடத்தையும், ஸ்காட்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தது.
எனினும், சர்வதேச தரவரிசையில் 14-வது இடத்தில் இருப்பதும், முந்தைய உலக கோப்பை தொடர்களில் காட்டிய செயல்பாடும் கருத்தில் கொண்டு, ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டு ‘சி’ பிரிவில் இணைக்கப்பட்டது.
வங்கதேசத்திற்கு ஏற்படும் நிதி பாதிப்பு
உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டதால், வங்கதேச அணி பெரும் நிதி இழப்பை சந்திக்க உள்ளது. பங்கேற்புக்கான ரூ.4.6 கோடி தொகை கிடைக்காது. ஸ்பான்சர் வருவாயும் பாதிக்கப்படும். மேலும், ஐ.சி.சி. வழங்கும் ஆண்டு நிதி பகிர்வு தொகையான ரூ.248 கோடியும் வழங்கப்படாது. இது பி.சி.பி. ஆண்டு பட்ஜெட்டின் சுமார் 60 சதவீதமாகும்.
இது இரண்டாவது முறையாக, கடைசி நேரத்தில் வேறு அணி விலகியதால் ஸ்காட்லாந்து உலக கோப்பை தொடரில் சேர்க்கப்படுகிறது. இதற்கு முன், 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடரிலும் இதேபோன்று ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
1996 உலக கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கையில் விளையாட மறுத்ததும், 2003 உலக கோப்பையில் ஜிம்பாப்வே செல்ல இங்கிலாந்து அணி மறுத்ததும், 2016 19-வயது உலக கோப்பையில் பாதுகாப்பு காரணமாக ஆஸ்திரேலியா விலகியதும் குறிப்பிடத்தக்க முன்னுதாரணங்களாகும். தற்போது, 2026 டி-20 உலக கோப்பையில் இந்தியா வர மறுத்த வங்கதேசம் நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான முந்தைய சலுகை
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதையடுத்து, இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற ஐ.சி.சி., அந்த போட்டிகளை துபாய்க்கு மாற்றியது.
அணிகள் பிரிவு நிலவரம்
2026 டி-20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள், தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. ‘சி’ பிரிவில் வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் உள்ளன.
