உக்ரைன் போருக்கு முடிவு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உதவினால், அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பரிசீலிப்பேன் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசை இதுவரை வெல்ல முடியாததில், அதிபர் டிரம்ப் நீண்ட காலமாக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை டிரம்ப் சந்தித்தபோது, அவர் பெற்ற நோபல் பதக்கத்தை டிரம்பிடம் வழங்கினார். இதையடுத்தும், பரிசு கிடைக்காதது குறித்து டிரம்ப் தனது விரக்தியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய செய்தியில், பரிசு கிடைக்காத நிலையில் இனி அமைதியைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என அவர் அதிருப்தியை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், இத்தாலியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜார்ஜியா மெலோனி, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஒருநாள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க முடியும் என்றும், உக்ரைனுக்கு நிலையான அமைதியை உருவாக்க அவர் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தினால், அவரை அந்த பரிசுக்கு பரிந்துரைக்க முடியும் என்றும் கூறினார். இது தொடர்பாக பரிசீலனை செய்வேன் என்றும் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
