வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்களுக்கு, ஜனவரி 30ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக 2025ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 6.41 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு மேற்கொண்டனர். பெறப்பட்ட படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்காத 9.73 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 17ம் தேதி வெளியிட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் தொடர்பான விண்ணப்பங்களை பெற நேற்று (ஜனவரி 18) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் மட்டும், பெயர் சேர்க்க 13.03 லட்சம் விண்ணப்பங்களும், பெயர் நீக்க 35,646 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்பெறும் வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசத்தை ஜனவரி 30ம் தேதி வரை தேர்தல் கமிஷன் நீட்டித்துள்ளது.
