மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதன் மூலம் நீதிபதிகள் எல்லை மீறியுள்ளனர் என வைகோ குற்றம்சாட்டினார்.
திருச்சியில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய வைகோவின் நடைபயணம், நேற்று இரவு மதுரையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது வைகோ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தர்கா உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக அங்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மதுரையில் உள்ள ஒரு நீதிபதி, மலை மீது உள்ள தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு எல்லை மீறியுள்ளார். அவர் உட்பட மூன்று நீதிபதிகளுக்கும் நான் கூறிக் கொள்கிறேன். நான் எதற்கும் அஞ்சுபவன் அல்ல; துணிச்சலுடன் பேசுகிறேன்.
மதுரை திருமங்கலத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், இந்திய அரசை குற்றம் சாட்டியதற்காகவும் தேசத்துரோக வழக்கை நான் சந்தித்துள்ளேன். எனது கருத்துகளில் நான் உறுதியாக இருப்பேன். தமிழகத்தில் மதவாதக் கொட்டம் ஒடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் அமித் ஷா, தி.மு.க.,வை துடைத்து எறிவோம் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, அவருக்கு என்ன திமிர் மற்றும் ஆணவம் இருந்தால் அவ்வாறு பேசினார் என கேள்வி எழுப்பினார். தி.மு.க., ஒரு எக்கு கோட்டை; அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்றால் வைகோவிற்கு பதற்றம் என சிலர் கிண்டல் செய்கிறார்கள் என்றும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
