இந்தியா–அமெரிக்கா மனக்கசப்பு நீங்கும்: செர்ஜியோ கோர் நம்பிக்கை
புதுடில்லி: நம் நாட்டுக்கான அமெரிக்க தூதராக நேற்று பொறுப்பேற்ற செர்ஜியோ கோர், “இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல. பிரதமர் நரேந்திர மோடியுடனான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்ன் நட்பு உண்மையானது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியா–அமெரிக்கா இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, ஐரோப்பா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதிபர் டிரம்புடன் பேசுவதை கூட பிரதமர் மோடி தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடு தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளது. இதையொட்டி டில்லி வந்த அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு விரைவில் நீங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவர் பேசியபோது, அமெரிக்காவுக்கு இந்தியா தான் மிக முக்கியமான நாடு என்றும், இந்தியா–அமெரிக்கா நட்புறவு வெறும் பரஸ்பர நலன் சார்ந்தது அல்ல; அதையும் கடந்து உயர்ந்த நிலை கொண்டது என்றும் கூறினார். உலகின் பழமையான ஜனநாயகத்திற்கும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்திற்கும் இடையிலான சங்கமமே இந்த வர்த்தக உடன்பாடு எனவும் குறிப்பிட்டார்.
இந்தியா உலகின் மிகப் பெரிய நாடு என்பதால், அதனுடன் வர்த்தக உடன்பாடு செய்வது எளிதானது அல்ல என்றாலும், உடன்பாட்டை எட்ட முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். வர்த்தகத்துடன் மட்டுமல்லாமல், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், அதிபர் டிரம்புடன் பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் இருப்பதாகவும், பிரதமர் மோடியுடனான அவரது நட்பு உண்மையானது என்றும் கூறிய செர்ஜியோ கோர், உண்மையான நண்பர்களுக்குள் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அது நிரந்தரமாக நீடிக்காது என தெரிவித்தார். டிரம்ப் அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ நிச்சயம் இந்தியா வருவார் என்றும் கூறினார்.
அத்துடன், ‘பாக்ஸ் சிலிகா’ கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இணைவதற்கான அழைப்பு அடுத்த மாதம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
