இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நா. 2025 அமைதி விருது; உலகளவில் அங்கீகாரம்
பெங்களூரு:
தெற்கு சூடானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியதற்காக, இந்திய பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார்-க்கு, ஐக்கிய நாடுகள் சபையின் 2025ம் ஆண்டுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு சூடானில் நடைபெறும் மோதல்களை தவிர்த்து அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக நம்பிக்கையை வலுப்படுத்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து சென்றுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி சுவாதி சாந்தகுமார், அடிமட்ட அளவில் பாதுகாப்பையும் சமூக நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாகவும், அவரது முயற்சியால் 5,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பெண்கள் சுதந்திரமாக நடமாடவும், உள்ளூர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உருவானதாகவும், நீண்ட காலமாக நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தில் நிலையான சமூக நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதிகாக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களை அங்கீகரிக்கும் வகையில், 2025ம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதி விருதுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பரிந்துரைக்கப்பட்டனர். இறுதிச்சுற்றில் நான்கு பேர் தேர்வாகிய நிலையில், ஒருமனதாக சுவாதி சாந்தகுமாரை விருதுக்கு தேர்வு செய்தனர்.
2018ம் ஆண்டு சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த சுவாதி, மேற்கு வங்கத்தின் கலிம்பாங்கில் லெப்டினன்டாகவும், லடாக்கின் லே மாவட்டத்தில் கேப்டனாகவும், பின்னர் குஜராத்திலும் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டார்.
