125 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் – பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
கோவை:
125 நாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக தடுக்கப்படும் என பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், முத்துக் கவுண்டன் புதூரில் நடைபெற்ற ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உறுதி திட்டம் (கிராமப்புறம்)’ தொடர்பான கலந்துரையாடலில் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பழைய தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மேம்படுத்தப்பட்டு, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டமாக தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக 100 நாள் வேலை 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை தாங்களே திட்டமிட்டு செயல்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. மத்திய அரசு அனுப்பிய நிதி, மாநில அரசின் முறைகேடுகள் காரணமாக தொழிலாளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. புதிய திட்டத்தின் கீழ் அந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, தொழிலாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் வகையில் நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதே பிரதமர் மோடியின் இலக்கு. மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் எந்தவிதமான இடைமறிப்பும், கமிஷனும் இன்றி மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். அந்த நோக்கத்திற்காகவே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முன்னேற வேண்டும், அதன் மூலம் வளர்ந்த இந்தியா உருவாக வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது; அவர்களுக்கு உரிய சலுகைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் பிரதான நோக்கம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மகளிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பிரதமர் மோடி அதிக அக்கறை கொண்டவர். பெண்கள் தொழிலாளர்கள் காட்டும் ஆதரவு, மோடியின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு நிதின் நபின் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, 100 நாளில் இருந்து 125 நாட்களாக வேலை நாட்கள் உயர்த்தப்பட்டதும், தினசரி கூலி ரூ.336 ஆக அதிகரிக்கப்பட்டதும், சம்பளம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுவதும் ஆகிய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கனகசபாபதி, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
