தகவல் பரிமாற்றத்திற்கு வேறு வழிகள் உண்டு: அஜித் தோவல் அதிரடி பேச்சு
புதுடில்லி: குடும்பத் தேவைகளைத் தவிர்த்து, போன்கள் அல்லது இணையத்தை பயன்படுத்துவதில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற வளர்ந்த இந்தியாவின் இளைய தலைவர்கள் என்ற கருத்தரங்கில், 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அஜித் தோவல் கூறுகையில்,
“நான் போன்களை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. தனிப்பட்ட குடும்ப விஷயங்களைத் தவிர, இணையம் அல்லது மொபைல் போன்கள் எனக்கு தேவையில்லை. அவை இல்லாமலேயே நான் சமாளித்து விடுவேன்,” என்றார்.
மேலும் அவர்,
“வெளிநாடுகளில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டும் சில நேரங்களில் போனை பயன்படுத்துவேன். அதற்கும் மேல் தேவையில்லை. தகவல் பரிமாற்றத்துக்கு இன்னும் பல வழிகள் இருக்கின்றன. ஆனால், அவை சாமானிய மக்களுக்கு தெரியாது,” எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர்,
“இந்தியா எல்லைப் பாதுகாப்பு மட்டுமின்றி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
இளைஞர்களை நோக்கி பேசிய அஜித் தோவல்,
“இன்றைய இளைஞர்கள் சுதந்திர இந்தியாவில் பிறந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். நான் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிறந்தவன். நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காக கடும் தியாகங்களை செய்தனர். பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்; நேதாஜி வாழ்நாள் முழுவதும் போராடினார்; மகாத்மா காந்தி சத்தியாகிரகம் நடத்த வேண்டியிருந்தது,” என நினைவூட்டினார்.
மேலும்,
“நாம் ஒரு முற்போக்கான நாகரிகமாக இருந்தோம். பிற நாடுகளையோ, வழிபாட்டு தலங்களையோ தாக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், வரலாறு நமக்கு கடுமையான பாடம் கற்றுக் கொடுத்துள்ளது,” என எச்சரித்தார்.
