ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் வன்முறை: எஸ்.ஜி. சூர்யா தாக்குதல் குறித்து பாஜக கண்டனம்
சென்னை:
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்டோர் மீது தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்டோர்மீது திமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், அந்த கோபம் திமுகவினருக்கு பயமாக மாறி, வன்முறையாக வெளிப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பொதுமக்களின் பிரதிநிதிகளாக விவாதங்களில் கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கே வன்முறையே பதிலாக இருப்பது, ஜனநாயகத்தின் குரலை நெரிப்பதற்கு சமம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறை இந்த தாக்குதலுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இதேபோல், அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், பகுத்தறிவு பேசும் திமுகவினரின் ஒரே பதில் வன்முறையே என கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது, எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட பாஜகவினரை தாக்குவதற்காக, நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன், தாக்குதலுக்கு வசதியாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக அவர்களை பாதுகாக்க காவல்துறை அதிக நேரம் செலவிடுகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, பயம் ஆட்சி செய்த திமுகவின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
