அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள்: கோவில் இடிப்பு விவகாரத்தில் திமுக அரசை சாடிய அண்ணாமலை
சென்னை: போலி மதச்சார்பின்மை பேசி, தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் திமுக அரசு, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
🔹 பழமையான குலதெய்வ கோவில்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில், அந்த பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவில், திருப்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
🔹 பழிவாங்கும் நடவடிக்கை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், காவல்துறையைக் குவித்து இந்த பழமையான கோவிலை திமுக அரசு முற்றிலும் இடித்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
🔹 ஹிந்து மத விரோத செயல்
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்கத் துணிவில்லாத அரசு, தலைமுறை தலைமுறையாக மக்கள் வழிபட்டு வரும் கோவில்களை இடித்து வருவது ஹிந்து மத விரோத செயல்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
🔹 போராட்டமும் கைது நடவடிக்கையும்
கோவில் இடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது காவல்துறை பலப்பிரயோகம் நடத்தியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔹 எச்சரிக்கை
கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்து வரும் திமுக அரசு, பொதுமக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
